அலார்ட் தினமும். டயரின் தன்மையை அறிந்து வாகனம் ஓட்டினால் விபத்தை தடுக்கலாம்.....

டயர்களையும் கவனியுங்கள் வாகன ஓட்டிகளை அலர்ட் செய்யும் விபத்துகள்



திருப்பூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பைத் தாண்டி பேருந்தில் மோதியதாகவும், லாரியின் டயர் வெடித்ததே விபத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. விபத்து செய்திகளில் அதிகளவு சொல்லப்படும் காரணம் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது என்பதே.


 சாலைக்கும் வாகனத்தும் இணைப்பாக இருக்கும் டயர்கள் விபத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. முழு வாகனத்தையும் தாங்கிக்கொண்டு மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் டயர்களை வாகன ஓட்டிகள் சரியாக கவனிக்கிறார்களா? 


ஒரு கிரீச் சத்தம் வந்தாலே மெக்கானிக்கை பார்க்க ஓடும் வாகன ஓட்டிகள், டயர் விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பதன் காரணம் என்ன?



பைக்கோ, காரோ, லாரியோ எந்தவித வாகனமாக இருந்தாலும் அதன் முன்பகுதி டயர்கள் மிக முக்கியம். 


வாகனத்தை முன்னோக்கி இயக்கிச் செல்லும் பெரும் பொறுப்பு முன் சக்கரங்களுக்கு உண்டு. அதனால் வாகனத்தின் முன் சக்கர டயர்கள் மீது அதிக கவனம் தேவை. 


ஒருவேளை அதிக வேகத்தில் செல்லும்போது டயர்கள் வெடித்தால் வண்டியின் போக்கை சரிவர கையாள முடியாது. எந்தப்பக்க டயர் பாதிப்புக்குள்ளானதோ அந்தப் பக்கமாக வாகனம் இழுத்தவாறே செல்லும். 


இதனால் பெரும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் பாதிப்புக்குள்ளானது முன்பக்க டயர்கள் என்றால் வாகனத்தின் கட்டுப்பாடு ஓட்டுநரின் கைவசமே இருக்காது.



*கவனக்குறைவுக்கு என்ன காரணம்?*


பொதுவாக வாகனத்தின் டயர்களை அதன் தேய்மானத்தின் அடிப்படையில் மாற்றவேண்டும்.


 ஆனால் தேய்மானம் அதிகமாகியும், பிடிமானம் இல்லாத அளவுக்கு டயர் வழுவழுவென சென்ற பிறகும் அதே டயர்களை பயன்படுத்துவார்கள்.


 அதற்கு முக்கிய முதல்காரணம் பணம். பொதுவாக டயர்கள் மற்ற உதிரிபாகங்களை விடவும் விலை சற்று அதிகமாக இருக்கும்.


 நேரடி தொல்லை ஏதும் தரவில்லை என்பதால் இன்னும் சிறிது காலம் ஓடட்டும் என்ற பொதுவான எண்ணத்தில் இருப்பார்கள்.


 டயர்கள் குறித்த விழிப்புணர்வு ஏதும் இல்லாமல் இருப்பதும் டயர்கள் மீதான கவனக்குறைவுக்கு காரணம்.


டயர் விஷயத்தில் கவனிக்க வேண்டியவை என்னென்ன?


டயரின் மேற்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் எந்த அளவுக்கு பிடிமானமாக இருக்கிறது என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.


 பிடிமானம் இல்லாமல் வழுவழுவென ஆகிவிட்டாலே டயரை உடனடியாக மாற்ற வேண்டும்.


டயரில் உள்ள காற்றின் அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.


 குறிப்பாக நீண்ட தூர பயணத்திற்கு முன்பாக காற்றின் அழுத்தத்தை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்.


 ட்யூப்லெஸ் டயராக இருந்தால் பஞ்சர் ஏதும் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்


வீல் பேலன்சிங் மற்றும் வீல் அலைன்மண்ட் செய்வது மிக முக்கியம். சக்கரங்களில் ரிம்மில் ஏற்படும் பாதிப்புகளும் டயரை பாதிக்கும்.


டயரின் உறுதிக்கு ஏற்பவே பாரம் ஏற்ற வேண்டும். அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றுவதால் டயரின் உராய்வு அதிகமாகி வெடிக்க வாய்ப்புள்ளது


சாலையின் தன்மைக்கு ஏற்ப வாகனத்தில் வேகத்தை சீராக கையாள வேண்டும். கரடுமுரடான பாதைகளில் வேகமாக செல்வது டயர்களை பாதிக்கும்.


பொதுவாக நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள், லாரிகளின் ஓட்டுநர்கள் டயர்களை அவ்வப்போது கவனித்துக்கொள்ள வேண்டும். 


நாங்கள் பலமுறை கூறியும் வாகன உரிமையாளர்கள் டயர்களை மாற்ற முன்வரவில்லை என்பது சம்பளத்திற்காக வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களின் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.


வாகன ஓட்டிகளின் உரிமங்களை சரிபார்ப்பது போல டயர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 


வாகன ஓட்டிகளும், வாகன உரிமையாளர்களும் உரிய கவனம் எடுத்து விபத்தில்லாத பயணத்திற்கு வழிவகுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் கூட.


 


 


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.