மனிதா உனக்கு அழகு எது தெரியுமா -கவிஞர். ச.லக்குமிபதி.
நல்லது சொல்வோம்- 24
அறமும் நமக்கு அழகு
கும்பிடும் கடவுளையே கட்டிப்போட்டு விட்டதே இந்த கொரானா என குமுறுக்கின்ற மக்களுக்கெல்லாம் கலியுக வரதா!
அவலங்கள் நீக்கி எம்மை ஆதரிக்கும் அத்தி வரதா!
வளமான வாழ்வுக்கு வரம்வேண்டாம்! நோயின் பயமின்றி வாழும் சாதாரண வாழ்வுக்கான வாழ்நாளும் தந்தாலே போதுமப்பா!
பண்டரிநாதா மாமலைவாசா வேங்கடவா இந்த கோவிட் சிக்கலை சீக்கிரம் அறுத்து எறியுங்கள்!
உலகமக்கள் சஞ்சலம் இல்லாமல் வாழ அருள் புரியுங்கள்! போதும் இந்தப் பொல்லாத நோயோடு போராடி நாங்கள் படுவது போதும்!
இன்னும் தொடரப் போகிறது ஊரடங்கு!
அதுவும் கடுமையான ஊரடங்கு! அக்டோபர் நவம்பர் டிசம்பர் என நாடு முழுக்க இதே நிலைமை தொடரும் என சின்னத்திரைகளில் விவாத அரங்கங்கள் தொடர்ந்தபடி இருக்கின்றன!
புற்றீசல் போல புறப்பட்டு வரும் காணொளிகள் மக்களை கொரானா விஷயத்தில் அச்சுறுத்தி மனசை ஆட வைத்து விடுகின்றன !
புலி வருது புலி வருது என்கிற கிலியை போல் கொரானாவின் வருகை கிலியாய் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது!
இறைவா இனியேனும் எங்களுக்காக இரங்கு! நம் முன்னோர்கள் எத்தனையோ நல்ல விஷயங்களை நம் சந்ததிகளுக் கெல்லாம் சொல்லி வைத்தார்கள்!
சங்ககால இலக்கியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் என 36 நூல்கள் நமக்கு முகவரிகளாக முன்னேற்றத்தின் வழிகாட்டிகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன!
கிபி இரண்டாம் நூற்றாண்டு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை தந்த நூற்றாண்டு!
நான்மணிக்கடிகை என்பது அந்த 18 நூல்களில் ஒன்றாகும்! நீதி நூல் பயில் என்றார் மகாகவி பாரதியார்!
நான்மணிக்கடிகை எனும் இந்த நூலை எழுதியவர் விளம்பிநாகனார்! இதில் 101 +2+4 ஆக 107 பாடல்கள் உள்ளன!
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் வெல்வது வேண்டின் வெகுளி விடல் என பல பொன்மொழிகள் இதில் உள்ளன!
4+மணி+கடிகை நான்கு ஒளிவீசும் ரத்தினம் மணிகளை சேர்ந்து செய்யப்பட்ட ஒரு அழகிய ஆபரணம் என்பது இதன் பொருள்!
ஒவ்வொரு வெண்பாவிலும் நான்கு நீதிகள் என 101 வெண்பாக்களிலும் அறம் சம்பந்தப்பட்ட செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன!
இதில் ஒரு பாடலை பார்ப்போம்! நிலத்திற்கு அணி என்ப நெல்லும் கரும்பும் குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கு அணி தான் செல் உலகத்து அறம்!
நிலத்துக்கு அழகு நெல்லும் கரும்பும் குளத்துக்கு அழகு தாமரை மலர்கள்! பெண்மைக்கு அழகு கற்பு!
மனிதா உனக்கு அழகு எது தெரியுமா?
நாளை நீ வீடு பேறு அடைய செய்யப்படும் அறம் உனக்கு அழகு சேர்க்கும் என்பது இப்பாடலின் பொருள்!
மற்ற அழகெல்லாம் அழிந்துவிடும் ஆனால் நீ செய்கிற அறம் நாளை நீ செல்லப் போகிற அந்த புதிய உலகத்திற்கு ஆதரவு கொடுக்க போவது நீ வாழ்கிற போது செய்கிற தானதர்மம் தான்!
இன்றைக்கு ஜூன் 14 உலக ரத்ததான தினம் ஆகும்! ஒரு உயிரை காப்பாற்ற ரத்த தானம் மிகவும் அவசியம்!
ரத்த தானம் செய்வதும் பெரியதோர் அறம் எனக் கொள்க!
இன்னொரு பாடல் பார்க்கலாம்! கொடுப்பின் அசனம் கொடுக்க விடுப்பின் உயிர் இடையீட்டை விடுக்க எடுப்பின் கிளையுள் அழிந்தார் எடுக்க கெடுப்பின் வெகுளி கெடுத்து விடல்!
இந்தப் பாடலின் பொருள் நீ ஒன்று கொடுக்க விரும்பினால் இல்லாதவர்க்கு அன்னம் கொடு!
வடமொழியில் அசனம் என்றால் சோறு என்பது பொருளாகும்! அன்னதானத்தை வலியுறுத்துகிறது!
இன்னொன்று உயிரைப் பற்றிய பற்றை விட்டு விடவேண்டும் ஒருவரை தாங்க வேண்டுமென்றால் தாழ்ந்து போய் இருக்கிற உறவினர்களில் ஒருவரை எடுத்து காப்பாற்று எடுக்க வேண்டும் என்று நினைத்தால் உன்னிடம் இருக்கின்ற கோபத்தை எடுத்து விடு!
இப்படி பல அறச் செய்திகளை நூல் முழுக்க பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்!
இல்லை என்று கூறாமல் ஒருவருக்கு கொடுப்பதைப் போல் திட்பமானது வேறு எதுவும் இல்லை என்பது இந்த நூல் ஆசிரியரின் விருப்பமாக இருக்கிறது!
தாழ்ந்து இருக்கும் உறவினரை தூக்கிவிட வேண்டாம் கூட இருக்கிற உறவுகளை கெடுத்து விடாமல் இருந்தாலே போதும் என்று நீங்கள் சொல்வதும் கேட்கிறது!
அதைத்தான் இந்த அறநூல் நமக்கு இதையெல்லாம் செய்யலாம் எதைச் செய்ய வேண்டாம் என்பதை தெளிவாக கூறுகிறது!
சங்ககால அறநூல்கள் நம்மை நெறிப்படுத்தி முறைப்படுத்தி முன்னேற்ற முடிசூட்டிட காத்திருக்கின்றன! பயன்படுத்திக் கொண்டால் அப்புறம் நம்மை விட யார் பலசாலிகள்!
அணிமணிகள் துணிமணிகள் ஆஸ்தி அந்தஸ்து எல்லாம் மனிதா உனக்கு அழகு என்றாலும் நிரந்தரமான அழகை தரப்போவது நீ செய்கின்ற அறம்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
இன்றைய உலக ரத்ததான தினத்தில் இந்த செய்தியை ஆழமாக உள்வாங்கிக் கொள்வோம்! உலகில் நாமும் உயர்வோம்!
இப்படிக்கு வாரியா தாசன் கவிஞர். ச. லக்குமிபதி வேலூர்- 9
Comments
Post a Comment