கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்காக வெளியிடப்பட்ட வழிமுறைகள்.



கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகள், சியவன்பிரஷ், மஞ்சள் கலந்த பால், முலேத்தி தூள், அஷ்வகந்தா மற்றும் நெல்லிக்கனி போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஆயுஷ் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.




கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்காக வெளியிடப்பட்ட வழிமுறைகளில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு உடல் சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சு விடுவதில் லேசான சிரமம் ஆகியவை தென்படலாம் என்று இந்திய சுகாதார அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டது.




கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 78,399 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர்.



இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,702, 595ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் விகிதம் 77.88ஆக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.




இதன் அடிப்படையில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், தங்களை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.




கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்




"வெதுவெதுப்பான நீரை தேவையான அளவு பருக வேண்டும். ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கி சாப்பிடலாம். உடல்நலம் சரியாக இருந்தால், சாதாரண வீட்டு வேலைகளை செய்யலாம். அலுவலகப் பணிக்கு படிப்படியாக திரும்பலாம்" என்று சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.



கொரோனாவில் இருந்து மீண்டு வரும் காலத்தில், "சியவன்பிரஷ், ஆயுஷ் க்வத், மஞ்சள் கலந்த பால், சம்ஷமனி வடி, கிலோய் தூள், அஷ்வகந்தா, நெல்லிக்கனி, முலேத்தி தூள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். உப்பு மற்றும் மஞ்சள் கலந்து வாய் கொப்பளிப்பதும் நல்ல பலனைதரும் என்று நம்பப்படுகிறது. தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே இவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்," என்று வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.




யோகாசனா, பிரானாயாமா மற்றும் தியானம் போன்ற லேசான உடற்பயிற்சிகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், "குணமடைந்து வருபவர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உட்கொள்வது சிறந்தது. போதிய அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்க்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.




"தொடர்ந்து வறட்டு இருமல் இருந்தால், உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளிப்பது அல்லது சாதாரண நீரில் ஆவி பிடிக்கலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே இருமல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக காய்ச்சல், மூச்சுத் திணறல், சொல்ல முடியாத நெஞ்சு வலி, இருக்கிறதா என ஆரம்பக் கட்டத்திலேயே கண்காணிக்க வேண்டும். மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்தை தாண்டியுள்ளது. 78,586 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.





Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

திருமணத்திற்கு லயன் சேவா சங்கம் சார்பாக செயலாளர் திரு.காமராஜ் நிதி உதவி...